பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாமென்று கலெக்டர் கூறியுள்ளார்.
விருதுநகர்,
நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் இயற்கைவள மேம்பாட்டு பணிகள், பண்ணை உற்பத்தி முறைகள் மற்றும் வாழ்வாதாரபணிகளுக்கென சுழல் நிதி வழங்குதல் ஆகிய பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இயற்கை வள மேம்பாட்டு பணிகளான ஊருணி அமைத்தல், ஊருணி புனரமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல், மழைநீர் செறிவூட்டும் அமைப்பு ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பண்ணை உற்பத்தி முறை பணிகளாக பழமரக்கன்றுகள் நடவு, வேளாண் காடுகள் அமைத்தல், பயிர் செயல்விளக்கத்திடல் அமைத்தல், வேளாண் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலமற்ற ஏழை எளிய விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கென தொழில் தொடங்குவதற்காக சுழல் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பதன் மூலம், வீணாக ஓடும் மழைநீரை குறைந்த செலவில் தடுத்து, மேல் மண்அரிப்பை தடுத்து மழைநீரை சேகரித்து வைக்கலாம். அது வறண்ட நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பாசன நீராக, உப பாசன நீராக பயன்படுகிறது. மேலும் மருந்து தெளித்தல் முதலிய விவசாய பணிகளுக்கும் பயன்படுகிறது. பண்ணைக்குட்டையில் தேக்கி வைக்கும் நீர் நிலத்தடி நீர்ஆதாரத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் சுற்றி உள்ள பாசன நீர் கிணறுகளில் ஊற்றை ஏற்படுத்தி பாசன வசதியை அதிகரிக்க செய்கிறது.
மழைநீர் ஓட்டத்தால் ஏற்படும் அரித்து செல்லப்படும் வண்டல் பண்ணைக்குட்டையில் சேகரிக்கப்படும். இந்த வண்டல் மண் பயிர்கள் சிறந்து வளர்ந்து கூடுதல் மகசூல் தருவதற்கு நல்ல உரமாகும். மேலும் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்கலாம். இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். நீடித்த மற்றும் நிலைத்த வேளாண் பணிகளை மேற்கொள்ள பண்ணைக்குட்டை அமைத்தல் மிகவும் பயனுள்ளதாக விளங்கும்.
பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்துடன், பணியிட அமைவு வரைபடம், நிலபுல எண் வரைபடம், செயலாக்கத்திற்கு முன்பான புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.