வேற்றுமை பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்; நல்லகண்ணு பேச்சு
செக்கானூரணி அருகே உள்ள பன்னியான் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, அனைவரும் வேற்றுமை பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பேசினார்.
செக்கானூரணி,
செக்கானூரணி அருகே உள்ள பன்னியான் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது, சாமி கும்பிடுவது சம்பந்தமாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பினரிடையே பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சந்தித்து ஆறுதல் கூறி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:– இரு தரப்பினரும் வேற்றுமையும், பாகுபாட்டையும் மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இதில் ஒரு தரப்பினரின் வீடு, ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இருதரப்பினரும் கருத்து வேறுபாடின்றி, சுமூகமாக வாழ நடவடிக்கை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பஸ் போக்குவரத்து வசதி தடைபட்டுள்ளதால், அதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ், விருதுநகர் மாவட்ட செயலாளர் பழனிக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் உள்பட மாவட்டப் பொறுப்பாளர்கள் மூர்த்தி, ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.