துன்பத்தில் இருந்து நாம் விடுபட அமைதி– மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும்


துன்பத்தில் இருந்து நாம் விடுபட அமைதி– மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:45 AM IST (Updated: 6 Nov 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

துன்பத்தில் இருந்து நாம் விடுபட அமைதி மற்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரம்மா குமாரிகள் இயக்க மாநாட்டில் மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா கூறினார்.

ஈரோடு,

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 80–வது ஆண்டு நிறைவு விழா ஈரோடு சம்பத்நகர் கொங்கு கலையரங்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கான மாவட்ட மாநாடு ‘‘அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறைஞானம்’’ என்ற தலைப்பில் நடைபெற்றது. விழாவுக்கு இயக்கத்தின் மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நவீன காலத்தில் வாழ்ந்து வரும் நம்மிடம் மடிக்கணினி, டேப்லெட் போன்ற தொழில்நுட்ப பொருட்கள் இருப்பதால் பல்வேறு விவரங்களை எளிதாக தெரிந்து கொள்கிறோம். அதேபோல் நம்முடைய அறிவையும் வெளிக்கொண்டு வருவதற்கு இறைஞானம் தேவைப்படுகிறது. தீபத்தில் இருந்து 7 வகையான வெளிச்சம் வருவதைபோல் மனித ஆன்மாவில் அன்பு, அமைதி, தூய்மை, ஆனந்தம் உள்பட 7 வகையான குணங்கள் உள்ளன.

வாழ்வில் மனவேதனை, கவலை, வலி ஆகியவற்றால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். சென்னையில் கடந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீரில் சென்னை மூழ்கிவிட்டது. இந்த ஆண்டு உலகம் முழுவதுமே பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். துன்பத்தில் இருந்து விடுபட அமைதி, மகிழ்ச்சியை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை கடைபிடித்து வந்தால் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகம் மிக விரைவில் உருவாகும். அதற்கு நமது பங்களிப்பு மிக முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், கோவை கே.ஜி. ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவச்சலம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இதில் மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, வக்கீல் காந்தி, அக்னி ஸ்டீல் சின்னசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், எஸ்.சிவானந்தம், டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், என்.சிவநேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி உலக மகிழ்ச்சிக்கான பலூன்கள் பறக்க விடப்பட்டன.


Next Story