சத்தியமங்கலம் அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி ஓட்டல் உரிமையாளர் மனைவி சாவு
சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளரின் மனைவி பரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). ஓட்டல் உரிமையாளர். இவருடைய மனைவி ஹேமலதா (39). இவர்களுக்கு பூர்விஷ் (19), விக்னேஷ் (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூர்விஷ், பி.காம். முதலாம் ஆண்டும், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் விக்னேஷ், பிளஸ்–2–ம் படித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் காலை சீனிவாசனும், ஹேமலதாவும் காரில் கோவை சென்றனர். அங்கு ஓட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் சத்தியமங்கலம் நோக்கி மாலையில் வந்து கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் ஓட்டி வந்தார். அவருக்கு அருகில் ஹேமலதா உட்கார்ந்திருந்தார்.
சத்தியமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க காரை ஓரமாக சீனிவாசன் ஓட்டினார். அப்போது கார் நிலைதடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் ஹேமலதா பரிதாபமாக இறந்தார். சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.