அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் உள்பட 55 பேர் படுகாயம்


அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் உள்பட 55 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:45 AM IST (Updated: 6 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 55 பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம்,

திருப்பூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு நேற்று பகலில் வந்தது. பஸ்சை திருப்பூரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் ஓட்டி வந்தார். ஈரோட்டை சேர்ந்த சுப்ரமணியன் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நேற்று மாலை கரூர் வந்து அறந்தாங்கி நோக்கி புறப்பட்டு சென்றது.

இதேபோல நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ்சை திருப்பூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஓட்டி வந்தார். பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணித்தனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் மணவாசி அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5 மணி அளவில் தடுப்புகளை கடந்து செல்ல முயன்றபோது திருப்பூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பஸ்சும், வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன. இதில் 2 பஸ்களிலும் இடிபாடுகளுக்குள் டிரைவர்கள், பயணிகள் சிக்கி படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாயனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வேன்களில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த55 பேரில் அரசு பஸ் டிரைவர் சிவக்குமார், கண்டக்டர் சுப்ரமணியன் உள்பட 16 பேர் கரூர் அரசு மருத்துவமனையிலும், வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் 39 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் வேளாங்கண்ணியில் இருந்து வந்த அரசு பஸ்சின் டிரைவர் முத்துக்கிருஷ்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படுகாயமடைந்தவர்களில் பெண் பயணிகள் அதிக அளவில் இருந்தனர். காயமடைந்தவர்களின் அனைவரது பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். படுகாயமடைந்தவர்களில் முதல் உதவி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்ப அவர்களுக்கு மாற்று பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

Related Tags :
Next Story