இயற்கை பேரிடர் மீட்புபணி குறித்த பயிற்சி கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்


இயற்கை பேரிடர் மீட்புபணி குறித்த பயிற்சி கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:42 AM IST (Updated: 6 Nov 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் காந்தி விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் இயற்கை பேரிடர் மீட்புபணி குறித்த பயிற்சியை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம்,

இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புபணி நடவடிக்கை குறித்த பயிற்சி சேலம் காந்தி விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. பயிற்சியை கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூலம் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புபணி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச்சங்கம், தேசிய மாணவர்படை ஆகியோருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் முதல் நிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேரிடர் மேலாண்மையின் போது மீட்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அதிக அளவில் தெரிந்து கொள்ளவும், முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு மீட்புப்பணிகள், முதலுதவி அளித்தல் குறித்த செயல்விளக்க பயிற்சி இங்கு நீச்சல் குளத்தில் செய்து காண்பிக்கப்பட்டது. இயற்கை பேரிடர் காலக்கட்டங்களில் பாதுகாப்பாக எவ்வாறு செயல்படுவது என அனைவரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சேலம் உதவி கலெக்டர் குமரேசன், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் ராஜேஷ்குமார், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம், சாய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story