வீரல்பட்டியில் கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு: சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வீரல்பட்டியில் கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு: சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

வீரல்பட்டியில் கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே வீரல்பட்டியில் தனியார் ஒருவர் கோழி பண்ணை அமைக்க முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரல்பட்டி, வீ.புளியம்பட்டி பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மேலும் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து சப்–கலெக்டருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பிறகு பொதுமக்கள் சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட வீரல்பட்டியில் 1000 குடும்பத்தினரும், வீ.புளியம்பட்டியில் 350 குடும்பங்களை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் ஒருவர் கோழி பண்ணை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இங்கு கோழி பண்ணை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும் முதியோர் இல்லமும் அருகில் செயல்பட்டு வருகிறது.

கோழி பண்ணை அமைந்தால் பொதுமக்களின் சுகாதாரத்தை மாசுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் கழிவுகள் மூலம் ஈக்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் ஈக்கள் தொல்லை அதிகரித்தால் பொதுமக்கள் சாப்பிட கூட முடியாத சூழ்நிலை ஏற்படும். பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அருகில் உள்ள விவசாய பொருட்கள் உற்பத்தியையும் பாதிக்கும் வகையில் அமையும். எனவே கோழிப்பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story