திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றவர்களால் பரபரப்பு


திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலக வாசலிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களும் பலத்த சோதனைக்கு பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கூட்ட அரங்கிற்கு வெளியே நின்ற ஒரு நபர் தான் கொண்டு வந்திருந்த பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திடீரென தற்கொலை செய்யும் நோக்கில் தலையில் ஊற்றினார். பின்னர் தரையில் படுத்தபடியே கோ‌ஷங்கள் எழுப்பினார். இதைப்பார்த்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக அங்கு வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி விட்டு அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபர் திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த ஜெயராஜ்(வயது 65) என்பதும், இவருடைய அண்ணன் அண்ணாத்துரை என்பவர் தன்னுடைய குடும்ப சொத்தின் பாகத்தை அபகரித்து விட்டதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் மண்எண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலைக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றையும் கலெக்டரிடம் அவர் கொடுத்தார்.

இதுபோல அங்கு மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். அதை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த அந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பல்லடத்தை சேர்ந்த ஜெயா(42) என்பதும், முதல் கணவரை விட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்த அவரை விட்டு 2–வது கணவரும் பிரிந்து சென்று விட்டதாக தெரிவித்தார்.

இதனால் குழந்தைகளை காப்பாற்ற 2–வது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதுகுறித்த மனு ஒன்றையும் கலெக்டரிடம் கொடுத்தார். ஒரே நாளில் 2 பேர் மண்எண்ணெயுடன் தற்கொலை செய்யும் முயற்சியில் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story