வண்டலூர் உயிரியல் பூங்காவில் சோகம் 4 புலிக்குட்டிகள், பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்தன
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட பெண் வங்கப்புலி குட்டி ஒன்று கடந்த 2013–ம் ஆண்டு சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
வண்டலூர்,
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட பெண் வங்கப்புலி குட்டி ஒன்று கடந்த 2013–ம் ஆண்டு சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. உத்ரா என பெயரிடப்பட்ட இந்த புலி (வயது 4) கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூங்காவில் உள்ள விஜய் என்ற ஆண் புலியுடன் இணை சேர்ந்து கர்ப்பம் தரித்தது.
எனவே இந்த புலியை தனியாக கூண்டில் வைத்து பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். சுமார் 110 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலையில் உத்ரா புலி அழகான 4 குட்டிகளை ஈன்றது. பின்னர் அந்த குட்டிகளை தனது வாயில் கவ்வியபடி கூண்டிற்குள் அங்கும், இங்கும் திரிந்து கொண்டிருந்தது.
அப்போது அதனுடைய பற்கள் புலிக்குட்டிகளின் கழுத்தில் பட்டு நேற்று முன்தினம் மாலையிலேயே 3 புலிக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. எனவே உயிருடன் உள்ள மற்றொரு குட்டியை தாயிடம் இருந்து பிரித்து தனியாக வைக்க அதிகாரிகள் நேற்று காலை முடிவு செய்தனர். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடந்தபோதே அந்த புலிக்குட்டியும் உயிரிழந்தது.
உத்ரா புலி, கர்ப்பம் தரித்த பிறகு காட்டில் உள்ள புலி போல ஆக்ரோஷமாக காணப்பட்டதாகவும், குட்டிகளை கூண்டிற்குள் மறைத்துவைப்பதற்காக தனது வாயில் கவ்வியப்படி சுற்றித்திரிந்ததால் 4 குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தது என்றும் பூங்கா அதிகாரி கூறினார். 4 புலிக்குட்டிகளும் பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் பூங்கா ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.