மணலி அருகே மாயமான தொழிலாளி கால்வாயில் பிணமாக மீட்பு


மணலி அருகே மாயமான தொழிலாளி கால்வாயில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 7 Nov 2017 3:00 AM IST (Updated: 7 Nov 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த மணலி, சின்ன சேக்காடு அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் சஞ்சய்பாபு (வயது 32). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார்.

திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த மணலி, சின்ன சேக்காடு அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் சஞ்சய்பாபு (வயது 32). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார். இவர் 3–ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மணலி புதுநகர் போலீசார் விசாரித்தபோது, சஞ்சய்பாபுவும், அவருடன் வேலைபார்க்கும் திரு.வி.க. நகரை சேர்ந்த நேவீஸ் பெர்னாண்டோவும் சம்பவத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே மணலி ஆமுல்லைவாயல் தரைப்பாலம் அருகே புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் மழைநீர் தேங்கி ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்து இருந்தது. பொதுப்பணித்துறையினர் நேற்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினர். அப்போது அதனுள் சஞ்சய்பாபுவின் பிணம் கிடந்தது. அவர் மழைநீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சஞ்சய் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடன் சென்ற நேவீஸ் பெர்னாண்டோவை போலீசார் தேடிவருகின்றனர்.

இது பற்றி அறிந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, முன்னாள் கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் கால்வாய் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அவரிடம் மணலி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்துவிழும் நிலையில் இருப்பதை பொதுமக்கள் தெரிவித்தனர். எம்.எல்.ஏ. தகவலின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அந்த சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.


Next Story