சர்வதேச கருத்தரங்கம் ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு


சர்வதேச கருத்தரங்கம் ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று வி.ஐ.டி.யில் நடந்த சர்வதேச கருத்தரங்க தொடக்க விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

வேலூர்,

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பள்ளியின் சார்பில் 15-வது அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கருத்தரங்கு அமைப்பு செயலாளர் துரைராஜ் வின்சென்ட் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் பற்றி தகவல் தொழில்நுட்ப பொறியியல் பள்ளி டீன் அஸ்வானிகுமார் விளக்கினார்.

நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி கருத்தரங்கின் சிறப்பு குறுந்தகட்டினை வெளியிட்டார். வி.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய கடந்த ஆண்டிற்கான ஆராய்ச்சி நூலையும் அவர் வெளியிட, அதை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அவர் பேசுகையில் “வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ஆராய்ச்சி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்காக அதிஅளவில் நிதி ஒதுக்கி, ஆய்வக வசதி உள்ளிட்ட நிலையான வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டதில் வி.ஐ.டி. முதலிடத்தில் உள்ளது. தொழில்நிறுவனங்கள் புதிய உற்பத்தி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை செய்துதர வி.ஐ.டி. தயாராக உள்ளது” என்றார்.

பெங்களூருவில் உள்ள அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், விஞ்ஞானியுமான வித்யாதர் ஒய்.முதுகவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினார். அப்போது “இன்றைய நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அளவு போதாது. அதிக அளவிலான கண்டுபிடிப்புகள் வரவேண்டும். அதற்கு ஏற்றவகையில் மாணவர்கள் ஆராய்ச்சி கல்வியில் அதிகம் ஈடுபடவேண்டும்” என்றார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீக்கின் பல்கலைக்கழக பேராசிரியர் கேங் லீ கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். துணைவேந்தர் ஆனந் ஏ.சாமுவேல், இணைதுணை வேந்தர் எஸ்.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான ஆராய்ச்சியாளர்களின் 950 ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story