சின்னம் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டால் ‘தேர்தல் வெற்றி மூலம் இரட்டை இலையை மீட்போம்’


சின்னம் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டால் ‘தேர்தல் வெற்றி மூலம் இரட்டை இலையை மீட்போம்’
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டால் தேர்தல் வெற்றியின் மூலம் அந்த சின்னத்தை நாங்கள் மீட்போம் என்று தர்மபுரியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தர்மபுரி,

அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது வழக்கு பாய்வதோடு மட்டுமின்றி கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. அரசின் அடக்குமுறையால் இந்த ஆட்சி மீது பொதுமக்களுக்கு கோபம் அதிகரித்து உள்ளது.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி முக்கிய முடிவுகளை எடுப்பதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களான தொண்டர்களின் கருத்தும், ஆதரவும் முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள சான்றாவணங்களில்(அபிடவிட்) ஏராளமான குறைபாடுகள் உள்ளன. மிரட்டி கையெழுத்து வாங்கியிருப்பதாக பல நிர்வாகிகளும் புகார் தெரிவித்து உள்ளனர். அதில் நடந்துள்ள முறைகேடுகள், போலி கையெழுத்து பிரச்சினை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக ஆட்சியாளர்கள் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களை பார்த்து நடுங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. பதவி சுகம் இருந்தால் போதும் என்ற அவர்களுடைய சிந்தனை காரணமாக இந்த அச்சம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தால் ஆட்சியை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

இந்த ஆட்சியில் அங்கன்வாடி உதவியாளர் பணி முதல் துணைவேந்தர் பதவி வரை பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் லஞ்சமாக பணம் பெறப்படுவதாக புகார்கள் வருகின்றன. இவர்கள் செய்யும் ஊழல், முறைகேடுகள் குறித்த தகவல்களை தர அரசுத்துறை அதிகாரிகளும், காவல்துறை உயரதிகாரிகளும் தயாராக உள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி சாதனையா? சோதனையா? என்பது பாராளுமன்ற தேர்தல் முடிவின்போதுதான் தெரியவரும்.

இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது. நாங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவோ, பதவி சுகத்தை அனுபவிக்கவோ போராடவில்லை. அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்றே போராடுகிறோம். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இப்போதைய ஆட்சியாளர்களுடன் நாங்கள் மீண்டும் இணைந்தால் அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி எங்களுக்கே கிடைக்கும். அவ்வாறு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும், ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்ததை போல் வருங்காலத்தில் மக்கள் ஆதரவை பெற்று தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அந்த வெற்றியின் மூலம் இரட்டை இலை சின்னத்தை நாங்கள் மீட்போம்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணை தலைவர் ஆர்.ஆர்.முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story