கந்துவட்டிக்கு வீட்டை எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் மனு


கந்துவட்டிக்கு வீட்டை எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் மனு
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டிக்கு வீட்டை எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 23-ந் தேதி நடந்த கூட்டத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்ததைதொடர்ந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் உள்ளே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த அந்தோணி என்பவர் தனது மகன்கள், மருமகள்கள், பேத்திகளுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் குடும்ப செலவுக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். இதற்கு கந்துவட்டியாக என்னிடம் ரூ.8 லட்சம் வசூல் செய்து விட்டார். எனது வீட்டையும் எழுதி வாங்கிவிட்டார். மேலும் எனது வாழைகளையும் சேதப்படுத்திவிட்டு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.

ஆலங்குளம் காந்திநகரை சேர்ந்த சேகர் மனைவி பார்வதி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நான் அய்யனார்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் எனது மகள் திருமணத்திற்கு ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அதற்கு நான் அதிக வட்டி கொடுத்துவிட்டேன். இருந்தாலும் அவர் ரூ.20 லட்சம் மதிப்புள்ள எனது வீட்டை எழுதி வாங்கிவிட்டார். நான் வீட்டை கேட்டால் ரூ.9 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டுகிறார். கந்துவட்டிக்கு வீட்டை எழுதி வாங்கியவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளார்.

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் குளத்தை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் மனு கொடுத்து உள்ளார். சர்வதேச உரிமைகள் கழகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் அடையாள அட்டை அணிந்து இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். லஞ்சம் வாங்கும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று கூறி உள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்கவேண்டும் என்று உக்கிரன்கோட்டை பகுதி விவசாயிகள் மனு கொடுத்தனர். நெல்லை மாவட்ட கிளப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும். அந்த கிளப்பின் பதிவை ரத்து செய்யவேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பினர், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினரும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திசையன்விளையில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. திசையன்விளை நகர பஞ்சாயத்து பகுதியிலேயே நிரந்தரமாக பணிமனை இயங்க கட்டிடம் கட்டவேண்டும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பட்டதாரி அணியினர் மனு கொடுத்தனர்.

கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரி கிராம மக்கள் ஊர் நாட்டாண்மைகள் ஆறுமுகம், பெருமாள் ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு 2 லாரியில் வந்து இறங்கி கலெக்டரிடம் மனு கொடுக்க செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும். மற்றவர்களுக்கு கிடையாது என்று கூறினார்கள். இதை தொடர்ந்து 5 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். அவர்களுடன் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் வந்தனர்.

கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சென்ற சவ ஊர்வலத்தில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்களிடம் தகராறு செய்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி உள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் சங்கர சுப்பிரமணியன், தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என பாளையங்கோட்டையில் 12-ந் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தார். 

Related Tags :
Next Story