சேலம்-சென்னை இடையே அடுத்த மாதம் இறுதியில் விமான சேவை தொடங்கும்


சேலம்-சென்னை இடையே அடுத்த மாதம் இறுதியில் விமான சேவை தொடங்கும்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் இறுதியில் சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கும் என்று சேலத்தில் இந்திய வர்த்தகம், தொழில் மகாசபை தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் தெரிவித்தார்.

சேலம்,

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் மகாசபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் தலைமையில் சேலத்தில் நேற்று நடந்தது. மகாசபை சேலம் நிர்வாகிகள் நரேந்திரகுமார், மோகன், சேலம் உற்பத்தி திறன் குழு தலைவர் ராமநாதன், செயலாளர் வெங்கடேஷ், துணைத்தலைவர்கள் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்குவதற்கான மத்திய அரசின் அனுமதி நகலை நிர்வாகிகள் மத்தியில் தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் வெளியிட்டு வாசித்தார்.

கூட்டத்திற்கு பின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் மகாசபை தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலத்தில் செயல்பட்டு வந்த விமான நிலையம் கடந்த 2010-ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. அதன்பிறகு 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது சேலம் விமான நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய இணைப்பு விமான சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனம், 72 இருக்கைகள் கொண்ட ஏ.டி.ஆர். வகை விமான சேவையை மேற்கொள்ள ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-விடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த விமான சேவை விஜயவாடாவில் இருந்து கடப்பா வழியாக சென்னை வரையிலும், பின்னர், சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தடையும். பிறகு சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கும், அங்கிருந்து மைசூர்-கடப்பா வழியாக மீண்டும் விஜயவாடாவிற்கும் செல்லும்.

சென்னையில் இருந்து சேலம் வரைக்கான சலுகை கட்டணம் ரூ.1,920 ஆகவும், சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.1,750 ஆகவும் வசூலிக்க நிறுவனம் விமான போக்குவரத்து துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. மொத்தமுள்ள 72 இருக்கைகளில் முதலில் பதிவு செய்யும் 36 இருக்கைகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை கட்டணம் பொருந்தும்.

சேலத்தில் இருந்து நேரடியாக சென்னை செல்ல ஏதுவாக உள்ள இந்த விமான சேவை சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்ட விமான பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அடுத்த மாதம் இறுதியில் சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story