கொப்பல் அருகே ஏரியில் மூழ்கி சகோதரிகள் உள்பட 5 பேர் சாவு
கொப்பல் அருகே ஏரியில் மூழ்கி சகோதரிகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. கோவிலுக்கு வந்தவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
கொப்பல்,
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அருகே உள்ள ஏமகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு பவித்ரா(வயது 15), பவுர்னிகா(13) மற்றும் பாவனி(11) என்ற மகள்கள் இருந்தார்கள். பிரகாஷ் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதனால் அவர் தனது மனைவி, மகள்களுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கங்காவதியில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து பிரகாஷ் தனது மனைவி, மகள் களுடன் வந்திருந்தார்.
நேற்று காலையில் துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட தங்களது சித்தப்பா ராகவேந்திராவுடன் (பிரகாசின் சகோதரர்) பவித்ரா, பவுர்னிகா, பாவனி ஆகியோர் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன், ராகவேந்திராவின் உறவினரின் மகனான ஆசிஸ்சாய்(14) என்ற சிறுவனும் சென்றான். கோவிலுக்கு செல்லும் முன்பாக சகோதரிகள் மற்றும் சிறுவன் ஆகிய 4 பேரும் ஏமகுட்டாவில் உள்ள ஏரியில் குளிக்க வேண்டும் என்று ராகவேந்திராவிடம் கூறினார்கள். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். பின்னர் ஏரியின் கரைப்பகுதியில் நின்று சகோதரிகள் மற்றும் சிறுவன் ஆசிஸ்சாய் குளித்தார்கள்.
ஏரியில் மூழ்கி 5 பேர் சாவு
இந்த நிலையில், ஏரியின் கரையில் நின்று குளித்த 4 பேரும் எதிர்பாராத விதமாக ஆழமான இடத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் நீச்சல் தெரியாமல் ஏரி தண்ணீரில் மூழ்கி அவர்கள் தத்தளித்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவேந்திரா ஏரியில் குதித்து 4 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் ஏரி தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் பவித்ரா, பவுர்னிகா, பாவனி, சிறுவன் ஆசிஸ்சாய் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். மேலும் அவர்களை காப்பாற்ற முயன்ற ராகவேந்திராவும் ஏரி தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுபற்றி அறிந்ததும் கங்காவதி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் ஏரியில் மூழ்கிய ராகவேந்திரா உள்பட 5 பேரின் உடல்களையும் மீட்டார்கள். அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. பின்னர் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கங்காவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி சகோதரிகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் கங்காவதியில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story