‘மாற்று இடம் வழங்க உறுதியளித்த அரசின் அறிவிப்பை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை’


‘மாற்று இடம் வழங்க உறுதியளித்த அரசின் அறிவிப்பை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை’
x
தினத்தந்தி 7 Nov 2017 11:34 AM IST (Updated: 7 Nov 2017 2:37 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி ஏரிக்கரையில் இருந்த வீடுகளை அகற்றியதற்கு பதிலாக மாற்று இடம் வழங்க அரசு உறுதியளித்த பிறகும் அரசின் அறிவிப்பை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம்,

செஞ்சி பி.ஏரிக்கரை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரிக்கரையின் மீது வீடு கட்டி வசித்து வந்தோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில் நாங்கள் பல ஆண்டுகளுக்கும் மேலாக கட்டி வசித்து வந்த வீடுகளை வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் திடீரென இடித்து விட்டனர். அவர்கள் எங்களுக்கு மாற்று இடம் தருவதாக உறுதியளித்தனர். அதற்காக செஞ்சியில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் எங்களுக்கு வாழ தகுதியற்ற வீட்டுமனைகளை பட்டாவாக வழங்கினார்கள். இதனால் அந்த வீட்டுமனைகளை நாங்கள் வாங்க மறுத்துவிட்டோம்.

எனவே அந்த இடங்களை தவிர்த்துவிட்டு செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புறம்போக்கு இடத்தில் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவும், அரசின் பசுமை வீடு ஒதுக்கக்கோரியும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தோம். இதையடுத்து எங்களுக்கு செஞ்சி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை வழங்குவதோடு, பசுமைவீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தருவதாகவும் தனிப்பிரிவில் இருந்து கடிதம் வந்தது.

ஆனால் இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எங்களுக்கு சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித உதவியும் அளிக்க முன்வரவில்லை. அரசின் அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையிட்டு செஞ்சி நகரத்தின் அருகிலேயே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும், பசுமை வீடுகளும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story