கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி


கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 7 Nov 2017 2:00 PM IST (Updated: 7 Nov 2017 12:04 PM IST)
t-max-icont-min-icon

கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கிண்ணக்கொரை கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கிண்ணக்கொரையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 23 பேருக்கு கறவை மாடுகள் வாங்க (காப்பீட்டு) கடன் பெற்று தருவதாக ஒரு நபருக்கு தலா ரூ.9 ஆயிரத்து 700 என ஏஜெண்ட் ஒருவர் வசூலித்தார். கடன் தருவதாக கூறியதன் பேரில், கடந்த ஜனவரி மாதம் 23 பேரும் சேர்ந்து ரூ.22 லட்சத்து 3 ஆயிரத்து 100 கொடுத்தோம். கடனுக்கான அறிவிப்பு இதுவரை வரவில்லை.

இதுதொடர்பாக வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டோம். வங்கியில் (காப்பீட்டு) கடன் தர முடியாது என்று கூறி விட்டனர். எனவே, எங்களிடம் பண மோசடி செய்த தனியார் ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கேத்தி பாலாடா இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் சாலையோரம் தெருவிளக்குகள் பொருத்தப்பட வில்லை. அதன் காரணமாக அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் இல்லை. இந்த பகுதிக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் சுகாதார மற்ற நிலையில் உள்ளது. இதனால் உடல்நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, இந்திரா நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பந்தலூர் அருகே சேரம்பாடி பாலபாடி வளைவு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜரத்தினம் கொடுத்த மனுவில், 2 கால்களும் ஊனமுற்ற எனக்கு அரசு மூலம் மொபட் வழங்கப்பட்டு உள்ளது. வீட்டிற்கு பின்புறம் ஷெட் அமைத்து மொபட்டை நிறுத்தி வருகிறேன். தற்போது சாலை அகலப்படுத்தப்பட உள்ளதால், அந்த ஷெட்டை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் நான் சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன். எனவே, மாற்றுத்திறனாளியான எனக்கு மொபட்டை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி துணைத்தலைவர் பிரகாஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உழவர் சந்தை அருகே இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் இ-சேவை மையம் மூடியே கிடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்துக்கு பொதுமக்கள் சென்றால், சர்வர் பிரச்சினை என்று காலம் தாழ்த்துகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைவதோடு, அலைக்கழிக்கப் படுகிறார்கள். ஆகவே, இ-சேவை மையத்தை சரிவர செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story