சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் வெறிநாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்


சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் வெறிநாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Nov 2017 5:00 PM IST (Updated: 7 Nov 2017 12:38 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் வெறிநாய்களால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

சிங்கம்புணரி,

மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான சிங்கம்புணரி, தொழில் நகரமாகவும் திகழ்கிறது. அந்த அளவிற்கு இங்கு அரிசி ஆலை, கயிறு தொழிற்சாலை என பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இங்கு வேலை தொடர்பாகவும், பொருட்களை கொள்முதல் செய்யவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

இதுபோக சிங்கம்புணரி வழியாக முக்கிய சாலையான காரைக்குடி-திண்டுக்கல் ரோடு செல்கிறது. இந்த வழித்தடத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பஸ்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. இந்தநிலையில் சிங்கம்புணரியில் உள்ள பஸ் நிலையத்தில் சமீப காலமாக வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக பஸ் நிலையத்தில் உலா வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். சில நேரங்களில் வெறிபிடித்த நாய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலரை கடித்துவிடுகின்றன.

இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், பஸ் நிலையத்திற்கு வரவே அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோக சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து, குடியிருப்பு வாசிகளை பயமுறுத்தி வருகின்றன. குறிப்பாக உப்பு செட்டியார்தெரு, அண்ணா நகர், காசியாபிள்ளைநகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அந்த வழியாக செல்லும் பொதுமக்களை நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. கடந்த வாரம் உப்பு செட்டியார்தெருவில் 2 பேரை நாய் கடித்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story