டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து 50 சதவீத மக்களிடமே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது


டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து 50 சதவீத மக்களிடமே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
x
தினத்தந்தி 7 Nov 2017 7:00 PM IST (Updated: 7 Nov 2017 12:52 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து 50 சதவீத மக்களிடம் மட்டுமே விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் வெங்கடாசலம் பேசினார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் வெங்கடாசலம் பேசியதாவது:-

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை தேவைகள் தொடர்பான மனு அளித்தால், அதன் உடனடி நடவடிக்கை எடுத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்யும் மனுக்கள் மீது காலதாமதம் இன்றி விசாரணை நடத்தி, மனுதாரர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலை தடுப்பு குறித்து 50 சதவீத மக்களிடம் மட்டுமே விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி நிர்வாகங்களிலும், பொது சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இத்தகை முயற்சியால் தான் மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க முடியும்.

மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 33 ஊராட்சிகளில் டெங்கு ஒழிப்பு பணிக்கான நிதி ஆதாரம் இல்லாமல் பணிகள் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் பங்களிப்பு, ஆதரவு இருந்தால் மட்டுமே கிராமங்களை தூய்மைபெறச் செய்ய முடியும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பின்னர் பெண்களுக்கு தையல் எந்திரம், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story