சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 7 Nov 2017 8:00 PM IST (Updated: 7 Nov 2017 12:55 PM IST)
t-max-icont-min-icon

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவியும் ஒன்றாகும். இது, புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக வந்து அருவியாக கொட்டுகிறது. இதுதவிர சுருளி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரும் வருகிறது. இந்த அருவியில் குளித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இங்குள்ள மலைக்குகைகளில் முப்பத்து முக்கோடி தேவர்களும், என்பத்து மூன்றாயிரம் ரிஷிகளும் தங்கியிருந்ததாக கருதப்படுகிறது. இதனால் இங்கு புண்ணியாதானம் செய்தால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதன் எதிரொலியாக சுருளி அருவி அடிவாரப்பகுதியில் புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது.

குறிப்பாக சித்திரை முதல் நாள், தைப்பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதேபோல் அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவர். குறிப்பாக திண்டுக்கல், மதுரை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்தமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சோதனைச்சாவடி அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

Next Story