நீலகிரியில் வினோத நோயால் பாதிக்கப்படும் ஆதிவாசி மக்கள்


நீலகிரியில் வினோத நோயால் பாதிக்கப்படும் ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:15 AM IST (Updated: 8 Nov 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் வனப்பகுதிகளையொட்டி வாசிக்கும் ஆதிவாசி மக்கள் வினோத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மரபுவழியாக தொடரும் இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியையொட்டி தோடர், கோத்தர், பனியர், முள்குரும்பர், காட்டுநாயக்கர், பெட்டகுரும்பர், இருளர் இனங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள், படுகர் இன மக்கள் மற்றும் குறைந்த அளவில் மவுண்டாடன் செட்டி இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் தோட்ட வேலை செய்து வருகின்றனர்.

கூடலூர் அருகே மாநில எல்லைப்பகுதிகளான எருமாடு, அய்யன்கொல்லி, அம்பலமூலா ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி மக்கள் கடந்த 1998–ம் ஆண்டு ஒரு சிலர் திடீரென இறந்தனர். அவர்கள் காலரா அல்லது மலேரியா நோய்கள் பாதிப்பால் இறந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. அவர்கள் இறப்புக்கான காரணம் புரியாத நிலையில் மருத்துவ அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் காலரா, மலேரியா நோயால் இறக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் முட்டில் என்ற பகுதியில் உள்ள மத்திய அரசு உதவியுடன் செயல்படும் விவேகானந்தா மெடிக்கல் மி‌ஷன் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் ஆதிவாசி மக்களுக்கு மருத்துவ முகாமை நடத்தினர். பனியர் இனத்தை ஆதிவாசிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 250–க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, 42 பேரின் ரத்த அணுக்களின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் மும்பை, டெல்லி பகுதிகளில் இயங்கும் நவீன ரத்த பரிசோதனை நிலையத்துக்கு அந்த 42 பேரின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், 4 பேர் ‘சிக்கில் செல் அனிமியா’ என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், 38 பேருக்கு ‘சிக்கில் செல் அனிமியா’ நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.

இந்த நோய் பாதித்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு மூலம் நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, நோய் பாதித்தவர்கள் நோய் பாதிக்காதவர்களை திருமணம் செய்து கொண்டால், ‘சிக்கில் செல் அனிமியா’ நோய் பாதிப்பு ஏற்படாது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் 40 வயது முதல் 60 வயதுக்குள் இறக்க நேரிடும்.

நோய் பாதித்தால், அவர்களது ரத்தத்தில் உள்ள வட்ட வடிவிலான சிவப்பு அணுக்கள் வடிவம் மாறி வளைந்து காணப்படும். இதனால் சிவப்பு அணுக்கள் ஒன்றுடன், ஒன்று இணைந்து ஒரு கட்டத்தில் அழிந்து விடும். சிவப்பு அணுக்கள் அழிவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் நலன் குன்றி, உடல் வெளிர் நிறமாக மாறுவதோடு, தளர்ச்சி ஏற்படும். இது தொற்றுநோய் அல்ல. மரபு வழியாக தொடரக்கூடியது என்று மருத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2–ந் தேதி பந்தலூர் அருகே அய்யன்கொல்லி கொல்லியட்டி கிராமத்தை சேர்ந்த தேவகி (வயது 65), இவரது மகள் பிரமிளா (35) ஆகிய இருவரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் இருவருக்கும் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தாய், மகள் இருவருக்கும் ‘சிக்கில் செல் அனிமியா’ நோய் பாதிப்பு இருந்ததும், அதனால் தான் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் தெரியவந்தது.

இதனால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளை ஒட்டி வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு ரத்த பரிசோதனை நடத்த வேண்டும். இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஊட்டி ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் முருகேசனிடம் கேட்ட போது, நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி வாழும் ஆதிவாசி மக்கள் ஒரு சிலருக்கு சிக்கில் செல் அனிமியா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மாத்திரைகளை பெற்று செல்கின்றனர், என்றார்.

இதுகுறித்து நாவா அமைப்பின் தலைவர் ஆல்வாஸ் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் நாவா மருத்துவ குழுவினர் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகள் நடத்திய மருத்துவ மற்றும் ரத்தப்பரிசோதனையில் ஆதிவாசி மக்கள், மவுண்டாடன் செட்டி இன மக்கள் என 250 பேருக்கு சிக்கில்செல் அனிமியாநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவ மற்றும் ரத்தபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் அக்கார்டு அமைப்பு ஆதிவாசி மக்கள் இடையே சிக்கில் செல்அனிமியா நோய் தொடர்பாக ரத்த பரிசோதனை செய்து வருகிறது. அப்பகுதியில் 50 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story