தொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பி வரும் ஏரி-குளங்கள் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


தொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பி வரும் ஏரி-குளங்கள் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை எதிரொலியாக தா.பழூர் பகுதியில் ஏரி-குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விவசாயம் நிறைந்த டெல்டா பகுதி யாகும். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் ஏரி, குளங்கள், பாசன நீர் வாய்க்கால்கள், நீர்த்தேக்க அணைகள், கொள்ளிட ஆறு ஆகியவற்றில் போதிய நீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தன. இதனால் விவசாயம் பொய்த்து போனதோடு மட்டும் மல்லாமல், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் குறைந்து கொண்டே வந்ததால், இது விவசாயிகளுக்கு வேதனையை தந்தது. இந் நிலையில் வறண்டு கிடந்த ஏரிகளை மீட்கும் பொருட்டு, அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரும் விதமாக விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதை பயன்படுத்திய விவசாயிகள் அனைவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து ஏரி, குளங் களையும் தூர்வாரி நன்கு ஆழப்படுத்தினர். தூர் வாரப்பட்ட ஏரிகள் அனைத்தும் மழைக்காக காத்திருந்தன.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது போதுமான அளவில் மழை பெய்து வந்ததால் ஏரி, குளங்களில் ஓரளவு நீர்தேங்கி கிடந்தன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தா.பழூர் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதன்படி தா.பழூர் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 5 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 388 ஏரி, குளங் களும் என மொத்தம் 403 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் தற்போது பெய்து வரும் மழையால் நேற்றைய நிலவரப்படி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள 440 மீட்டர் நீளமுள்ள அணைக்குடி ஏரி, 615 மீட்டர் நீளமுள்ள காசுடையான் ஏரி, 800 மீட்டர் நீளமுள்ள சித்தேரி, 350 மீட்டர் நீளமுள்ள சுக்கிரன் ஏரி, 1,415 மீட்டர் நீளமுள்ள பூவோடை ஏரி ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை பெற்றுள்ளது.

அதேபோன்று சுத்தமல்லி நீர்த்தேக்கத்தின் முழுகொள்ளளவு 4.7 மீட்டர், இதில் 3.6 மீட்டர் வரை நீர் நிரம்பியுள்ளன. மேலும் 4,694 ஏக்கர் பாசன நீர் தரும் பொன்னாற்று வாய்க்காலில் இருந்து போதுமான நீர் சென்று கொண்டிருக்கிறது. அதேபோன்று சிந்தாமணி வடிகால் ஓடை, செங்கால் ஓடை ஆகியவற்றில் வரும் மழைநீர் கொள்ளிடத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஏரி, குளங்கள் நன்கு ஆழப்படுத்தப்பட்டுள்ளதால் நீர் சேமிப்பும் அதிகரிக்கும். இதனால் இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து தா.பழூர் ஒன்றிய பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் தியாக ராஜன் கூறுகையில், தா.பழூர் ஒன்றியத்தில் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மழைநீர் கசிந்து வெளியேறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், தைல மரக்கட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஆதலால் பொதுமக்கள், விவசாயிகள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தா.பழூர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். 

Next Story