போக்குவரத்துவிதிகளை மீறிய 49 ஆயிரத்து 783 வாகனஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து
போக்குவரத்துவிதிகளைமீறிய 49 ஆயிரத்து 783 வாகனஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மதுரை,
போக்குவரத்துத்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் தயானந்த் கட்டாரியா தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துபேசியதாவது:–
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களுடனான சாலைப்பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. எந்தெந்த இடங்களில் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகிறதோ, அதை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் கடந்த (2016) ஆண்டை விட கடந்த செப்டம்பர் மாதம் வரை 420 உயிரிழப்புகள் குறைந்துள்ளது. விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 49ஆயிரத்து 783 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2020–ம் ஆண்டிற்குள் விபத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தென்தமிழகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வாகன ஓட்டுனர்களுக்கான உயர் பயிற்சி வகுப்பு பட்டறை விரைவில் மதுரையில் துவங்கப்படும். நான்கு வழிச்சாலையில் விதியை மீறி ஓட்டி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலைப்பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறம் தொடர்பாக பள்ளி பருவத்திலேயே கற்றுக்கொடுக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
300 கி.மீட்டர் தொலைவிற்கு மேல் செல்லும் பேருந்துகளில் இரண்டு வாகன ஓட்டுனர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களது பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரையின் படி தனியார் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்க வேக கட்டுப்பாட்டு கருவி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், கூடுதல் கலெக்டர் அம்ரித், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.கரண் சின்கா, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.சைலேஷ் குமார் யாதவ், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப் குமார், போலீஸ்கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.