மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் விடுத்ததால் பெண் தீக்குளிக்க முயற்சி
கொலை மிரட்டல் விடுத்ததால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்த ஒரு பெண் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை,
மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் தவுடன். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் திவ்யா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று காலை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்களுடன் திவ்யாவின் உறவினர்கள் பவுன்ராணி, முல்லைக்கொடி ஆகியோரும் வந்திருந்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திவ்யா திடீரென்று பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து பாட்டிலை பிடுங்கி தடுத்தார்கள்.
இதைதொடர்ந்து திவ்யா மற்றும் அவருடன் வந்திருந்த முல்லைக்கொடி, பவுன்ராணி ஆகியோரை போலீசார் விசாரித்தனர். விசாரணையின்போது திவ்யா கூறும்போது, எனது கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். என்னுடைய அத்தை தேவகி கஞ்சா விற்பனை செய்வதாக எங்கள் பகுதியை சேர்ந்த 4 பேர் போலீசில் பொய் புகார் கொடுத்தனர். அதனால் போலீசார் எனது அத்தை தேவகியை கைது செய்தார்கள். அதன் பிறகு எனது தம்பி கோபி, கணவரின் தம்பி மகாராஜனையும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மிரட்டினார்கள்.
குழந்தைகளுடன் என்னை வீட்டை காலி செய்துவிட்டு போகும்படியும், போகாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் போலீசில் புகார் செய்தேன். அதன் பின்பும் என்னை விரட்டி விட்டு வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தான் தீக்குளிக்க வந்தேன் என்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் திவ்யா தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.