பணமதிப்பு இழப்பு கொள்கையே கந்துவட்டிக்கு வழி வகுத்தது இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு


பணமதிப்பு இழப்பு கொள்கையே கந்துவட்டிக்கு வழி வகுத்தது இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:15 AM IST (Updated: 8 Nov 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பு இழப்பு கொள்கையே கந்துவட்டிக்கு வழி வகுத்தது என்று இந்தியகம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு கருத்தரங்கம் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். மாநில தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியாதவது:– தமிழக அரசு முடமாகி விட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் சேதத்திற்கு சாதாரண மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லை. இருக்கும் வரை முடிந்த அளவு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியான செய்தி. பாலா மீது புகார் அளித்த கலெக்டருக்கு பத்திரிகை சுதந்திரம் பற்றி தெரியவில்லையா, முதல்–அமைச்சர், கலெக்டர், காவல் துறை அதிகாரிகள் பொறுப்பாக நடந்து கொண்டிருந்தால் இறப்பை தடுக்கலாம் என்ற கருத்தையே அவரது கார்ட்டூன் காட்டுகிறது. புகார் அளித்த கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தென் மாவட்டங்களில் ஜி.எஸ்.டி. வரியால் நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வரியை ரத்து செய்ய வேண்டும். வட மாநிலங்களில் பட்டாசுக்கு உச்சநீதி மன்றம் விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகள் வரைந்த ஓவியம்தான் பிரதமர்மோடி. உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை பிரதமர்மோடி நேரில் பார்த்ததால் அரசியல் மாற்றம் ஏற்படாது. கமல்ஹாசனின் அரசியல் விமர்சனங்கள் சரியானவைதான். மோடி அறிவித்த பணமதிப்பு இழப்பு கொள்கையே கந்து வட்டிக்கு வழி வகுத்தது. சிறு தொழில் நடத்தும் மக்களுக்கு அரசாங்கம் வங்கி மூலம் கடன் வழங்கியிருந்தால் கந்து வட்டி பிரச்சினை வந்திருக்காது. கேரளாவில் கந்து வட்டி தொழில் நடத்தினால் 10 வருடம் கடுங்காவல் தண்டனை உண்டு. ஆனால் தமிழகத்தில் கந்து வட்டி தொழில் செய்பவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story