பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது மாவட்ட கலெக்டர்கள் மாநாடு


பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது மாவட்ட கலெக்டர்கள் மாநாடு
x
தினத்தந்தி 8 Nov 2017 3:30 AM IST (Updated: 8 Nov 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது.

பெங்களூரு,

பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா “ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள அரசு நிலங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

கலெக்டர்கள் மாநாடு

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், மண்டல கமிஷனர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முதன்மை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலெக்டர்கள் மாநாட்டை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:-

“இது தேர்தல் ஆண்டு. அடுத்த ஆண்டு(2018) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அத்துடன் தற்போதைய நிதி ஆண்டு முடிவடைய இன்னும் 5 மாதங்கள் உள்ளன. அதனால் மாநில அரசு கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

15 லட்சம் வீடுகள்


அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு, மலிவு விலை இந்திரா உணவகம், ரேஷன் அட்டைகள் விநியோகம், நிலம் ஒதுக்கீடு, நில உரிமை பத்திரங்களை விநியோகம் செய்தல் போன்ற பணிகளை நீங்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 3 லட்சம் வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 15 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்தோம்.

அதன்படி பயனாளிகளுக்கு விரைவாக செயல்பட்டு வீடுகளை ஒதுக்கும் பணிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். இந்த பணியை முன்னுரிமை அடிப்படையில் கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும். பெங்களூருவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இங்குள்ள கலெக்டர் ஆர்வமாக செயலாற்றி வருகிறார்.

அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை

இதேபோல் பிற மாவட்டங்களின் கலெக்டர்களும் செயல்பட்டு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மீட்கப்படும் நிலங்களில் அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்கள், மாணவர்கள் தங்கும் விடுதிகள், சமுதாய பவன்கள் கட்ட பயன்படுத்த முடியும். அரசு சொத்துகளை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் பொறுப்பு ஆகும். மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியை செய்யாவிட்டால் தவறு நேர்ந்துவிடும்.

கலெக்டர்கள் சமூக மற்றும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். குடிநீர், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்களை அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தில் 6 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் பாபுஜி சேவை மையங்கள் தொடங்க முடிவு எடுக்கப்பட்டு இதுவரை 514 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு அதிக பயன்

மீதமுள்ள பஞ்சாயத்துகளில் அடுத்த 2 மாதத்தில் இந்த பாபுஜி மையங்களை திறக்க வேண்டும். இந்த மையங்கள் மூலம் அரசின் 100 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த மையங்களால் பொதுமக்களுக்கு அதிக பயன் ஏற்படுகிறது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்பது அரசின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக கழிவறை வசதியை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 52 லட்சம் கழிவறைகளை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 32 லட்சம் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கழிவறை கட்டும் பணிகளை துரிதகதியில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திரா உணவகங்களை...


மலைநாடு பகுதிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படுவதாக எனக்கு தகவல் வந்தது. இந்த பிரச்சினையை தீர்க்க உங்களின் ஆலோசனையை கூறுங்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் மலிவு விலை இந்திரா உணவகங்களை வருகிற ஜனவரி 1-ந் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 247 உணவகங்கள் திறக்கப்பட உள்ளன. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு உணவகம் திறப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

சில பகுதிகளில் மக்கள்தொகை சற்று குறைவாக இருந்தாலும் உணவகத்தை திறக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், விவசாய சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த உணவகம் அமைக்க இடத்தை அடையாளம் காண வேண்டும். ஒருவேளை அரசு நிலம் கிடைக்காவிட்டால், நடமாடும் உணவகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வாடகைக்கு வீடுகளை எடுத்து உணவகத்தை திறக்க வேண்டும்.

திட்டங்களின் பயன்கள்


மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் பயன்கள் அந்தந்த மக்களுக்கு போய் சேர நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இதில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். நீங்கள் அந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.”

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மாநாட்டில் மந்திரிகள் எச்.கே.பட்டீல், காகோடு திம்மப்பா, ஜெயச்சந்திரா, ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க், மகாதேவப்பா, தலைமை செயலாளர் சுபாஷ் சந்திர குந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த மாநாடு மாலை வரை நடைபெற்றது. மதிய உணவுக்காக 1 மணி நேரம் இடைவெளி விடப்பட்டது.

Next Story