தமிழகத்தில் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் 25 சதவீதம் உயர்வு


தமிழகத்தில் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் 25 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:15 AM IST (Updated: 8 Nov 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கூறினார்.

ஆம்பூர்,

கடந்த மாதம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் சுண்ணாம்புகாளை மற்றும் பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்தது.

இதன் காரணமாக வேலூர் மாநகராட்சி மற்றும் பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய 7 நகராட்சிகளுக்கும், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது பாலாற்றில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் கூட்டுகுடிநீர் திட்ட குழாய்களை சரி செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் நேற்று ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதிக்கு வந்து குழாய்கள் சரி செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பச்சகுப்பம், சுண்ணாம்புகாளை பாலாற்று பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் பாதிப்புக்குள்ளானது. இதனால் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் அதனையொட்டியுள்ள ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்யும் பணிவேகமாக நடந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் இப்பணிகள் முடிவடையும். அதைத்தொடர்ந்து மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. நிலத்தடியில் சுமார் 10 கோடி லிட்டர் அளவு தண்ணீர் உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.

திருச்சி அருகே பூதலூர் குடிநீர் திட்டத்தில் தொடர் மழையால் லேசான சேதம் அடைந்துள்ளது. அதனையும் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக குடிநீர் குழாய்கள் சேதமடையாத வகையில் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தங்கஜெயா, மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாக பொறியாளர்கள் கணேசன், சுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story