பண்ட்வால் தாலுகாவில் சம்பவம் பால்குனி ஆற்றில் மூழ்கி வாலிபர் உள்பட 5 பேர் பலி
பண்ட்வால் தாலுகாவில் பால்குனி ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு,
பண்ட்வால் தாலுகாவில் பால்குனி ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆற்றில் மூழ்கி 5 பேர் பலிதட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா ஆராலா கிராமம் முளாராபட்டணா பகுதியைச் சேர்ந்தவர் அஜாமத்(வயது 18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் சமது(17), அஸ்லாம்(17), ரமீஜ்(17), முபாசிர்(17) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலையில் பால்குனி ஆற்றில் குளிக்க சென்றார்.
அவர்கள் ஆற்றங்கரையில் தங்களுடைய உடைகள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை வைத்துவிட்டு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
போலீசில் புகார்இதற்கிடையே வீட்டிலிருந்து வெளியில் சென்ற தங்களுடைய மகன்கள் மீண்டும் வீடு திரும்பாததால் அவர்களுடைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய மகன்களை பல இடங்களில் தேடினர். அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என பலரிடம் விசாரித்தனர். ஆனால் அஜாமத் உள்பட 5 பேரும் எங்கு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.
பின்னர் இதுபற்றி அவர்கள் பண்ட்வால் புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அஜாமத் உள்பட 5 பேரும் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.
ஆற்றங்கரையில் கிடந்த உடைகள்இந்த நிலையில் நேற்று காலையில் ஆராலா கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் பால்குனி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் அஜாமத் மற்றும் அவருடைய நண்பர்களின் உடைகள், செல்போன்கள் ஆகியவை ஆற்றங்கரையில் கிடப்பதை பார்த்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள், அஜாமத் உள்பட 5 பேரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த அவர்கள் பண்ட்வால் புறநகர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஆற்றங்கரையில் கிடந்தது அஜாமத் மற்றும் அவருடைய நண்பர்களின் உடைகள் மற்றும் செல்போன்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டது.
உடல்கள் மீட்புஇதனால் அஜாமத் உள்பட 5 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, ஆற்றில் அஜாமத் மற்றும் அவருடைய நண்பர்களை தேடினர்.
அப்போது முதலில் சமதுவின் உடல் தண்ணீரில் இருந்து தானாக மேலே வந்து மிதந்தது. இதனால் அஜாமத் உள்பட 5 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்ததை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் நீண்ட நேர தேடலுக்கு பிறகு அஜாமத், அஸ்லாம், ரமீஜ், முபாசிர் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு படையினரும், நீச்சல் வீரர்களும் இணைந்து மீட்டனர். அவர்களுடைய உடல்களைப் பார்த்து அவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர்.
சோகம்அதையடுத்து அஜாமத் உள்பட 5 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் ஒருவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.