உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்துவிட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் – கார் மோதல்; விவசாயி பலி
உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்துவிட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளேகால்,
குண்டலுபேட்டை அருகே தனது திருமணத்திற்காக உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்துவிட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.
உறவினர்களுக்கு...சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஒங்கள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது மகன் மஞ்சப்பா(வயது 35). விவசாயி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடக்க இருந்தது.
இதைதொடர்ந்து மஞ்சப்பா கடந்த சில தினங்களாக தனது உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மைசூருவில் உள்ள தனது உறவினர்களுக்கு திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு மஞ்சப்பா தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
சாவுகுண்டலுபேட்டை தாலுகா தெரக்கனாம்பி அருகே உள்ள ரியமாகபுரா கேட் அருகே வந்தபோது அதே சாலையில் வந்த கார், மஞ்சப்பா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த மஞ்சப்பா சம்பவ இடத்திலேயே செத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெரக்கனாம்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் விபத்தில் பலியான மஞ்சப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெரக்கனாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க சென்ற விவசாயி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்ஆந்திர மாநிலம் கடப்பா மாநிலத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா(22). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் சார்பில் சாம்ராஜ்நகர் தாலுகா பகுதியில் நடைபெற்று வரும் பகு கிராம குடிநீர் திட்ட பணிகளை பார்வையிட ராமகிருஷ்ணா அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் அந்த பணிகளை சாம்ராஜ்நகரில் தங்கி பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலாஜிபுரா பகுதியில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்ட ராமகிருஷ்ணா தனது மோட்டார் சைக்கிளில் சாம்ராஜ்நகர் டவுனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மரியலா கிராமம் அருகே வந்தபோது அதே சாலையில் வந்த சரக்கு வாகனம், ராமகிருஷ்ணா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே செத்தார். இதுகுறித்து சாம்ராஜ்நகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.