திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை வீடு, வீடாக கலெக்டர் ஆய்வு


திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை வீடு, வீடாக கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் வீடு, வீடாக ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சலை ஏடிஸ் கொசுக்கள் பரப்புகின்றன. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் துப்பரவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் துப்புரவு முகாம்கள் நடத்தி, அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றர். அங்கு டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என்பதை கண்டறிந்து அவற்றை அழித்து வருகின்றனர். இந்த பணிகளை அவ்வப்போது கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லிகை நகர், டேவிட் நகர், ஸ்ரீதேவிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது தொட்டிகள், குடங்களில் சேமித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளனவா? என்று அவர் பார்வையிட்டார். சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சுற்றுப்புறத்தை மழைநீர், கழிவுநீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வீடுகளை பூட்டிவிட்டு நீண்ட நாட்கள் பொதுமக்கள் வெளியூர் சென்றிருந்தால் அங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே நீண்ட நாட்கள் பூட்டி கிடக்கும் வீடுகளை கண்டறிந்து, அதன் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துப்புரவு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் முறையாக தூய்மை பணிகளை மேற்கொள்ளாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.


Next Story