மால்வாணியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி பள்ளி மாணவி சாவு 3 பேர் படுகாயம்


மால்வாணியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி பள்ளி மாணவி சாவு 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

மால்வாணியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் பள்ளி மாணவி பலியானாள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மால்வாணியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் பள்ளி மாணவி பலியானாள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தறிகெட்டு ஓடிய லாரி

மும்பை மால்வாணி மார்வே சாலையில் நேற்று காலை 8 மணியளவில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அந்த லாரி, அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேர் மீது மோதியது.

இதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதற்கிடையே அந்த லாரி நிற்காமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவை மோதி தள்ளிக்கொண்டு சாலையோர பள்ளத்திற்குள் பாய்ந்து நின்றது. இதையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மாணவி பலி

இந்த பயங்கர விபத்தில் படுகாயம் அடைந்து பள்ளி மாணவ, மாணவியர் 4 பேரும் துடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். தகவல் அறிந்து வந்த மால்வாணி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவளது பெயர் முஸ்கான் மேமன்(வயது9) என்பது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story