செய்யாத பணிக்காக ரூ.1¼ கோடி அனுமதித்த 2 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம்
செய்யாத பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1¼ கோடி அனுமதித்த 2 என்ஜினீயர்களை பணி இடைநீக்கம் செய்து பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மும்பை,
செய்யாத பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1¼ கோடி அனுமதித்த 2 என்ஜினீயர்களை பணி இடைநீக்கம் செய்து பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரூ.1¼ கோடி மோசடிமும்பையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் உள்ள அறைகளில் சீரமைப்பு செய்யும் பணி ஒப்பந்ததாரர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் அந்த பணியை செய்யாமல், செய்துவிட்டதாக கூறி அதற்கான தொகை ரூ.1 கோடியே 30 லட்சத்தை வாங்கி உள்ளனர்.
இந்த மோசடி பற்றி பா.ஜனதாவின் சரன் வாக்மரே எம்.எல்.ஏ. மற்றும் சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் எம்.எல்.ஏ. விடுதி அறைகளை சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல், அதை செய்து விட்டதாக போலி ரசீது தயார் செய்து சமர்ப்பித்து உள்ளனர்.
2 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம்அந்த தொகையை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் பி.எஸ்.பேக்டே, கே.டி.தோங்கடே ஆகியோர் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அனுமதித்து உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த மோசடியில் தொடர்புடையதாக கருதப்படும் செயற்பொறியாளர் பிரகன்யா வால்வே நவிமும்பைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஏ.கே.சிங் கூறுகையில், ‘எங்களது பறக்கும் படையினர் இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு சம்மந்தப்பட்ட ஒப்பந்ததராரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.