கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வரும் பெண்களை சோதனை செய்ய கூடாரம் அமைப்பு


கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வரும் பெண்களை சோதனை செய்ய கூடாரம் அமைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2017 11:02 AM IST (Updated: 8 Nov 2017 11:02 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வரும் பெண்களை சோதனை செய்ய தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் தினசரி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் நபர்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த மாடகாசம்பட்டியை சேர்ந்த கர்ப்பிணி அமுதா பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை சுடிதாருக்குள் மறைத்து வைத்து கொண்டு உள்ளே வந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்களை சோதனை செய்ய தற்காலிக கூடாரம் அமைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் போலீசார், மனு கொடுக்க வரும் பெண்களை கூடாரத்துக்கு அழைத்து சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்புகின்றனர்.

Next Story