தேனியில் ஒரு கிலோ காளான் ரூ.200-க்கு விற்பனை


தேனியில் ஒரு கிலோ காளான் ரூ.200-க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 Nov 2017 3:00 PM IST (Updated: 8 Nov 2017 11:53 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஒரு கிலோ காளான் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேனி,

தேனியில் ஒரு கிலோ காளான் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காளான் என்பது மண் மீது வளரும் ஒருவிதமான பூஞ்சை தாவரம். சுவை மிகுந்த காளான் வளர்ப்புத் தொழில் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இதனால், ஆண்டு முழுவதும் சந்தைகளில் வளர்ப்பு காளான்கள் விற்பனைக்கு வருகின்றன. அதே நேரத்தில் இயற்கையாக முளைக்கும் காளான்கள் மழைக்காலங்களில் மட்டுமே விற்பனைக்கு வரும்.

வளர்ப்பு காளான்களை விட வயல்வெளிகள், மலையடிவார பகுதிகள், தோட்டங்கள், வேலிப் பகுதிகளில் இயற்கையாக முளைக்கும் காளான்கள் சுவை அதிகம். இதனால், இயற்கை காளான்கள் விற்பனைக்கு வந்தால் மக்கள் போட்டிப் போட்டு வாங்கிச் செல்வார்கள்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் இயற்கை காளான்கள் வளர்ந்து உள்ளன. இவற்றை சிலர் பறித்து விற்பனை செய்கின்றனர்.

அந்த வகையில், தேனி நகரில் காளான் விற்பனை தொடங்கி உள்ளது. எடமால் தெரு, சந்தை வளாகம் போன்ற பகுதிகளில் பெண்கள் சிலர் சாலையோரம் அமர்ந்து காளான் விற்பனை செய்து வருகின்றனர். வீதி, வீதியாக சென்றும் காளான் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கிலோ காளான் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், கூடலூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ராட்சத காளான்களும் முளைத்து வருகின்றன. ஒரு காளான், 1 கிலோ எடைக்கு மேல் உள்ளது. இந்த ராட்சத காளான் 1 கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேனியில் விற்பனைக்கு வரும் காளான் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அடுத்து வரும் நாட்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்தால் அதிக அளவில் காளான் கிடைக்கும் என்று வியாபாரம் செய்த பெண்கள் தெரிவித்தனர்.

Next Story