கருணாநிதியை மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது; மு.க.ஸ்டாலின்


கருணாநிதியை மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது; மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 Nov 2017 5:30 AM IST (Updated: 9 Nov 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இதில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்போரின் கனவு பலிக்காது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை,

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கருப்பு தினமாக அனுசரித்து இந்தியா முழுவதும் நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை அண்ணா நகரில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினும், மற்றவர்களும் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

புழக்கத்தில் இருந்து கொண்டிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்கள். அப்படி அறிவித்த காரணத்தால், மக்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஒட்டுமொத்தமாக, பணப் புழக்கத்தை முடக்கியிருக்கக்கூடிய ஆட்சிதான் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி என்பதை இந்த நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.

வங்கிகளில், ஏ.டி.எம். வாசல்களில் காத்துக்கொண்டிருந்த நேரங்களில் எத்தனை பேர் மயங்கி விழுந்தார்கள்? ஏன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாண்டுபோனார்களே? இதற்கெல்லாம் யார் காரணம்? நான் தெளிவாக சொல்கிறேன், இதற்கெல்லாம் வரக்கூடிய காலகட்டத்தில், பிரதமராக இருக்கும் மோடி பதில் சொல்லியே தீர வேண்டும்.

தி.மு.க.வை பொறுத்தவரையில், நம்மோடு கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகளை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், கம்யூனிஸ்டு கட்சிகளாக இருந்தாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் என எந்தக் கட்சியாக இருந்தாலும், பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கிறோம். இன்னும் தொடர்ந்து எதை பற்றியும் கவலைப்படாமல், எந்த அச்சுறுத்தலுக்கும் கவலைப்படாமல், அதை எதிர்ப்போம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.

சில ஆங்கில தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட செய்திகள் என்ன தெரியுமா? தி.மு.க. போராட்டத்தை நிறுத்தி விட்டது. அதற்கு என்ன காரணத்தை சொன்னார்கள் தெரியுமா? பிரதமராக இருக்கும் மோடி கோபாலபுரத்திற்கு வந்தார். தலைவரை சந்தித்து விட்டு ஸ்டாலினிடம் கை குலுக்கினார். ஆக ஏதோ சமரசம் ஆகி விட்டது, ஏன் அதையும் தாண்டி கூட்டணி கூட உருவாகக் கூடிய நிலை வந்துவிட்டது. என அவரவர்கள் கற்பனைக்கேற்ப தகுதிக்கேற்ப சில செய்திகளையெல்லாம் வெளியிட்டார்கள்.

தலைவர் கருணாநிதியை சந்தித்து விட்டுச் சென்ற பிறகு நான் நிருபர்களிடத்தில் தெளிவாகச் சொன்னேன். அரசியல் காரணத்திற்காக பிரதமர் வந்தாரா? என நிருபர் என்னிடம் கேட்டார். நான் மழை வெள்ள பகுதிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறேன். மோடியும் அரசியலுக்காக வரவில்லை, நாங்களும் அவரை அரசியலுக்காக பயன்படுத்த எந்த நேரத்திலும் எந்த நிமி‌ஷத்திலும் தயாராக இல்லையென்று சொன்னேன்.

நான் துபாயில் சார்ஜா நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறேன். நான் 6–ந்தேதி புறப்பட்டு சென்னைக்கு வருவதாக என்னுடைய பயணத்திட்டம். 6–ந்தேதி மாலை புறப்படுவதாக இருக்கும்போது 5–ந்தேதி காலையிலே எனக்கு தொலைபேசியில் செய்தி வருகிறது. என்ன செய்தி என்று சொன்னால், 6–ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறபோது கருணாநிதியை சந்திக்க வேண்டுமென விரும்புகிறார். உங்கள் தந்தையை தி.மு.க. தலைவரை சந்திக்க விரும்புகிறார் எனவே நீங்கள் அவசியம் சென்னையில் இருக்க வேண்டுமென பிரதமர் எண்ணுகிறார், என்ற செய்தி எனக்கு கிடைத்த பிறகு ஒரு மனிதாபிமான அடிப்படையிலே இந்த நாட்டின் பிரதமர் வருகிறபோது நானும் என்னுடைய கடமையை ஆற்றிட வேண்டுமென்கிற நிலையில் 5–ந்தேதி இரவோடு இரவாக கிளம்பி வந்தேன். 6–ந்தேதி அவர் வருகை தந்தபோது அவரை வரவேற்று தலைவரிடத்தில் அழைத்துச் சென்றேன்.

வந்தவுடனேயே வணக்கம் சார் என்று தான் சொன்னார். இதுதான் நடந்தது. அதற்குப் பிறகு இன்னொன்றும் சொன்னார்கள், இங்கிருந்தால் உங்களை சரியாக ஓய்வெடுக்க விடமாட்டார்கள், எல்லோரும் வந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள், வேண்டுமென்றால் டெல்லிக்கு வாருங்கள், என்னுடைய வீட்டிலே மருத்துவ சிகிச்சை கொடுத்து அனுப்புகிறேன் என்று சொன்னார். உண்மை தான். பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. ஆக இது மனிதாபிமான, அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதை திணித்து இன்றைக்கு அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலர் திட்டமிடுகிறார்களே, உங்கள் கனவு நிச்சயம் பலிக்காது என்பதை மாத்திரம் நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.

பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையை அறிவித்த நேரத்தில், எதற்காக இதை கொண்டு வருகிறோம் என்று 3 காரணங்களை பட்டியலிட்டார். 1. கள்ள நோட்டுகளை ஒழிப்பது. 2. கருப்பு பணத்தை ஒழிப்பது. 3. பயங்கரவாதத்துக்கு வரும் நிதியை ஒழிப்பது. ஆனால், இதில் ஒன்றாவது நிறைவேறியிருக்கிறதா என்று நான் கேட்க விரும்புகிறேன்.

அதுமட்டுமா, சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜி.எஸ்.டி. வரி ஜூலை 1–ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் பல குளறுபடிகள் ஏற்பட்டு, வணிக சமூகத்தில் இன்றைக்கு பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அவசர கதியில் ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்தார்கள். 28 சதவீதம் என்ற அதிகபடியான வரியால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். மூன்று மாதங்கள் கழித்து, இன்றைக்கு மத்திய அரசின் வருவாய் துறை செயலர் ஹேஷ்முக் ஆதியா, ஜி.எஸ்.டி. வரி விகிதம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, நிதி மந்திரி தலைமையில் இருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில், தற்போது எடுத்துள்ள முடிவு என்னவென்றால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம் ஏற்படுத்துவதென முடிவெடுத்து உள்ளது.

குஜராத் தேர்தல் பிரசாரத்தில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மேலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று பிரதமரே தெரிவித்துள்ளார். எனவே, வரி விதிப்பு மிக அதிகம் என்றும், ஜி.எஸ்.டி.யால் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் எடுத்து வைத்த வாதத்தை ஏற்காத பிரதமர் இன்றைக்கு அதை ஓரளவுக்கு ஏற்கும் நிலைக்கு வந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. எனவே, இந்த பாதிப்பை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து, இன்றைக்கு கருப்பு தினமாக மட்டுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். இது இன்றோடு முடிந்து விடுகின்ற போராட்டமாக இது அமைந்திடவில்லை. நிச்சயமாக இந்த போராட்டம் மேலும் தொடரும்.

எந்தெந்த வகைகளில், எவ்வித கோணங்களில் இந்த போராட்டங்களை நடத்திட வேண்டுமென்று, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து முடிவெடுக்கிறார்களோ, அந்த வகைகளில் எல்லாம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல நாம் காத்திருக்கிறோம் என்பதை மத்தியில் ஆளக்கூடிய மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story