மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணம் அதிகஅளவில் வெளிவந்துள்ளது வானதி சீனிவாசன் பேட்டி
‘மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணம் அதிக அளவில் வெளிவந்துள்ளது’ என்று கோவையில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை,
கோவை மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் வானதிசீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டது. இதனால், தீவிரவாதம் மற்றும் நக்சல் அமைப்புகளுக்கு கிடைத்து வந்த நிதி தடுத்து நிறுத்தப்பட்டது. நாட்டின் நிதி கட்டமைப்பு தூய்மையாக்கப்பட்டு உள்ளதால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் 23 லட்சத்து 22 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ.3.68 லட்சம் கோடி சந்தேகத்திற்குரியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய ரூ.4.7 லட்சம் பணப் பரிவர்த்தனைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூ.16 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு வந்து சேரவில்லை. ரூ.29 ஆயிரத்து 213 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து வருமான வரித் துறை சார்பில் நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் கணக்கில் காட்டப்படாத வருமானத்தில் இருந்து வரி, அபராதம் என வசூலிக்கப்படும்.
ரூ.1,626 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான உயர் மதிப்பு நோட்டுகள் குறைக்கப்பட்டு உள்ளன. ரூ.7.62 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளது. இடதுசாரி வகுப்புவாதம் 20 சதவீதம் குறைந்துள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் வங்கிக ளில் நேரடியாக செலுத்தும் வகையில் ஊதியச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 50 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே ஒரு லட்சம் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஆரம்ப நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். ஆனால், படிப்படியாக நிலைமை சீரடைந்து இந்திய வரலாற்றில் அதிக அளவிலான கருப்புபணம் வெளிவந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, பணமதிப்புநீக்க தினம் வளர்ச்சி நாளாக பா.ஜனதா சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை ரங்கேகவுடர் வீதியில் வானதி சீனிவாசன் பட்டாசு வெடித்து வளர்ச்சி நாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர், அங்குள்ள கடைக்காரர்களிடம் பணமதிப்புநீக்க நடவடிக்கை யின் பலன்கள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் அங்கிருந்த வியாபாரிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார், ரமேஷ்குமார், பத்ரிநாத், செய்தி தொடர்பாளர் சபரிகிரிஷ், மீனாட்சி, கண்மணிபாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.