வசதி படைத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை பணமதிப்பு இழப்பின் போது ஏழைகள்தான் வங்கி வாசலில் காத்திருந்தார்கள்; டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. பேட்டி


வசதி படைத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை பணமதிப்பு இழப்பின் போது ஏழைகள்தான் வங்கி வாசலில் காத்திருந்தார்கள்; டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2017 5:00 AM IST (Updated: 9 Nov 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பு இழப்பின்போது வசதி படைத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏழைகள்தான் வங்கி வாசலில் காத்திருந்தார்கள் என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் நேற்று தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை ஏழை–எளிய, நடுத்தர மக்களைத்தான் பெரிதும் பாதித்தது. வசதி படைத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது ஏழைகள்தான் வங்கி வாசலில் காத்து இருந்தார்கள். பணக்காரர்கள் யாரும் வரவில்லை.

மோடி பிரதமராக வரும் முன்பு பொதுமக்களுக்கு ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அதில் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. அதை மறைக்கவே பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டனர். தொழில்கள் பாதிக்கப்பட்டன. கருப்பு பணமுதலைகள் எப்போதும்போலவே இருக்கிறார்கள்.

முந்தைய அரசுகள் செய்ய முன்வராத திட்டத்தை பா.ஜனதா செய்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறி இருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இதற்கு முன்பு 1977–ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சியின்போது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சுமுகமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறினார்.


Next Story