மின்கசிவால் குடிசை தீப்பிடித்து எரிந்ததில் காவலாளி உடல் கருகி சாவு


மின்கசிவால் குடிசை தீப்பிடித்து எரிந்ததில் காவலாளி உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 9 Nov 2017 4:45 AM IST (Updated: 9 Nov 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே மின்கசிவால் குடிசை தீப்பிடித்து எரிந்ததில், காற்றாலை நிறுவன காவலாளி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரியை சேர்ந்தவர் ராஜ்(வயது 65). இவர் பணகுடி அருகே கடம்பன்குளத்தில் உள்ள ஒரு காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இவர் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற அவர், காற்றாலையின் அருகே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்குடிசையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அந்த காற்றாலையில் இருந்து குடிசைக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காற்றாலையில் இருந்து வரும் மின்ஒயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக குடிசை தீப்பற்றி எரியத் தொடங்கியது.

அந்த சமயத்தில் ராஜ் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் குடிசை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது அவருக்கு உடனடியாக தெரியவில்லை. தீ கொழுந்து விட்டு எரிந்தபோது ஏற்பட்ட வெப்பத்தினால் அவர் திடுக்கிட்டு கண்விழித்து பார்த்தார். அப்போதுதான் குடிசை தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

உடனே அவர் உயிர்தப்பிக்க எண்ணி படுக்கையில் இருந்து எழுந்து ஓட முயன்றார். ஆனால் அவரால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் தீ அவர் மீதும் பற்றி எரிந்தது. இதனால் அவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே கரிக்கட்டையானார். மேலும் அந்த குடிசையும், குடிசைக்குள் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு சைக்கிள் மற்றும் மொபட் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமானது.

காற்றாலையில் இருந்து வரும் மின்சாரத்தை கணக்கீடு செய்வதற்காக அந்த காற்றாலை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் நேற்று காலை அப்பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு குடிசை எரிந்து சாம்பலாகி இருப்பதையும், காவலாளி ராஜ், கரிக்கட்டையாக கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள், ராதாபுரம் போலீசுக்கும், வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வள்ளியூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து பார்வையிட்டனர். ராதாபுரம் போலீசார், கரிக்கட்டையாக கிடந்த ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார கசிவில் குடிசை தீப்பிடித்து எரிந்து காவலாளி இறந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story