போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இடையே கடும் வாக்குவாதம்-கைகலப்பு


போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இடையே கடும் வாக்குவாதம்-கைகலப்பு
x
தினத்தந்தி 9 Nov 2017 4:45 AM IST (Updated: 9 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இடையே நேற்று கடும் வாக்குவாதம்-கை கலப்பு ஏற்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரியை அடுத்த போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராம ஆண்டவர் (வயது 53). தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஏற்கனவே சேலம், ஒகேனக்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றி உள்ளார்.

அதே மத்தூர் போலீஸ் நிலையத்தில் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிங்கல்கதிரம்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (52) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 2 மாதமாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பார்த்திபன் பணிக்கு தாமதமாகவும், சீருடை அணியாமலும் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சீருடை அணியாமல் போலீஸ் நிலைய மாடிக்கு சென்ற பார்த்திபனை இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் பார்த்து கண்டித்தார்.

அந்த நேரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், தான் கடந்த 20 நாட்களாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், அதனால் பணிக்கு தாமதமாக வந்ததாகவும் கூறினார். அவரது விளக்கத்தை ஏற்காத இன்ஸ்பெக்டர் தொடர்ந்து அவரை கண்டித்தார். அந்த நேரம் இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதை பார்த்த சக போலீசார் செய்வதறியாமல் திகைத்து போனார்கள். இதில் 2 பேரும் ஒருவரையொருவர் கைகளை மடக்கி தாக்கி கொண்டார்கள். அதில் பார்த்திபனுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவருக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2 பேரும் மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுணனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவரை உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். விசாரணையை தொடர்ந்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

போலீஸ் நிலையத்தில், போலீசார் முன்னிலையிலேயே இன்ஸ்பெக்டரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் மத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story