வில்லிவாக்கத்தில் மாயமான 4 வயது சிறுமி பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை


வில்லிவாக்கத்தில் மாயமான 4 வயது சிறுமி பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில், மாயமான 4 வயது சிறுமி பிணமாக மீட்கப்பட்டாள். அவளை யாரேனும் கடத்தி சென்று, கொலை செய்தனரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூர், 

சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 29). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி(24). இவர், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவர்களுக்கு 4 வயதில் காவ்யா என்ற மகளும் இருந்தாள். நேற்று முன்தினம் மாலை சிறுமி காவ்யா, தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது திடீரென அவள் மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள ரெயில்வே சுற்றுச்சுவர் அருகே குப்பைகளுக்கு மத்தியில் சிறுமி காவ்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். இதை கண்ட அந்த பகுதி மக்கள், வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சிறுமியின் வாயில் நுரை தள்ளி இருந்தது. அவளது கழுத்து பகுதியில் காயம் போன்ற அடையாளமும் காணப்பட்டது.

கொலையா?

எனவே வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி காவ்யாவை, யாராவது கடத்தி வந்து கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு உடலை இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வாயில் நுரை தள்ளி இருப்பதால் விஷம் கொடுத்து கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெங்கடேசன், ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்ட யாராவது, இந்த முன்விரோதத்தில் அவர்களை பழிவாங்க சிறுமியை கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களது அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

4 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story