மழை ஓய்ந்து, சூரிய தரிசனம் கிடைத்ததால் சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை சலவைக்கூடங்கள் புத்துயிர் பெற்றன


மழை ஓய்ந்து, சூரிய தரிசனம் கிடைத்ததால் சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை சலவைக்கூடங்கள் புத்துயிர் பெற்றன
x
தினத்தந்தி 9 Nov 2017 5:00 AM IST (Updated: 9 Nov 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

மழை ஓய்ந்து சூரிய தரிசனம் கிடைத்ததால் சேத்துப்பட்டு, சைதாப்பேட்டையில் உள்ள சலவைக்கூடங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.

சென்னை,

வட கிழக்கு பருமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி வானம் பிரகாசமாக இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் காணப்படுவது போன்று வெயில் சுட்டெரித்தது.

கடந்த சில நாட்களாக மழையில் நனைந்தவர்கள், சூரியன் கோர தாண்டவம் ஆடியதால் நேற்று வியர்வை மழையில் நனைந்தவாறு சென்றனர்.

பருவமழையை நம்பி விவசாயம் உள்பட ஏராளமான தொழில்கள் இருப்பதுபோல, சூரியனின் தயவை எதிர்நோக்கியும் ஏராளமான தொழில்கள் உள்ளன. அதில் இன்றியமையாதது ஒன்று தான் சலவைத்தொழில். மழையால் ஒரு வாரத்துக்கும் மேலாக முடங்கி கிடந்த சலவைத்தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

சலவைக்கூடம்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவைக்கூடத்தில் அழுக்கு, கறை மற்றும் மாசு படிந்த துணிகளை துவைத்து சலவைத்தொழிலாளர்கள் உலரவைத்திருந்தனர். சலவைக்கூட வளாகத்தில் மட்டுமின்றி, அங்கு உள்ள வீடுகளின் மாடிகள், கைப்பிடி சுவர்கள் உள்பட எங்கு பார்த்தாலும் உலர வைக்கப்படும் துணிகளாகவே தென்பட்டது.

இதேபோல சைதாப்பேட்டையில் உள்ள சலவைக்கூடத்திலும் சலவைத்தொழிலாளர்கள் துணிகளை துவைத்து உலர வைத்திருந்தனர். ஒரு வாரத்துக்கு பின்னர் வெயில் அடித்துள்ளதால் சலவைத்தொழிலாளர்கள் துணிகளை துவைத்து உலரவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சலவைக்கூடம் மட்டும் இன்றி வீடுகளில் சேகரித்து வைத்திருந்த அழுக்கு துணிகளை சென்னையில் பெரும்பாலான தாய்மார்கள் நேற்று துவைத்தனர். இதனால் பெரும்பாலான வீட்டின் மாடிகளில் துணிகள் காய்ந்ததை காணமுடிந்தது.

தண்ணீர் வசதி வேண்டும்

இதுகுறித்து சைதாப்பேட்டை சலவைக்கூடத்தை சேர்ந்த சலவைத்தொழிலாளியான காளிதாஸ் கூறுகையில், “மழைக்காலம் தொடங்கியதற்கு பின்னர் மழை ஒரு நாள் இடைவெளி விட்டுள்ளதால், துணிகளை துவைத்து உலர வைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம். போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் இந்த தொழிலே அழியும் நிலை உள்ளது. ஆகவே சைதாப்பேட்டை சலவைக்கூட வளாகத்தில் துணிகளை துவைப்பதற்கு அரசு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றார். 

Next Story