திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Nov 2017 4:06 AM IST (Updated: 9 Nov 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் குச்சிக்காட்டை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் தினகரன் (வயது 18). நேற்று முன்தினம் தினகரன் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தேவன், ஜான், மகேஷ், நிஜாம், அஜித்குமார், சங்கர், விஜய் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கி உள்ளனர்.

இது குறித்து தினகரன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழ்நல்லாத்தூர்

திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூர் சின்னத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி (37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்கரவர்த்தி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பாலாஜி வளர்த்து வரும் மாடு மோதி அவர் கீழே விழுந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் பாலாஜியை தகாத வார்த்தையால் பேசி தாக்கி உள்ளார். அவருடன் சக்கரவர்த்தியின் மனைவி சுமதி, அவரது தாயார் பாஞ்சாலி, மகன் ஆகியோரும் பாலாஜியை தாக்கி உள்ளனர்.

பின்னர் அவர்கள் பாலாஜியின் வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த பாலாஜி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாலாஜி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சக்கரவர்த்தி, அவரது மனைவி சுமதி, தாயார் பாஞ்சாலி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story