பணம் பறிப்பதற்காக கட்டுமான அதிபரின் மகனை கடத்த முயன்ற வாலிபர் சிக்கினார்


பணம் பறிப்பதற்காக கட்டுமான அதிபரின் மகனை கடத்த முயன்ற வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:42 AM IST (Updated: 9 Nov 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

பணம் பறிப்பதற்காக கட்டுமான அதிபரின் மகனை கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

தானே மாவட்டம் பத்லாப்பூரை சேர்ந்த கட்டுமான அதிபரின் 7 வயது மகன் சம்பவத்தன்று கட்டிட வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவன் காணாமல் போனான். இதனால் கலக்கம் அடைந்த குடும்பத்தினர் அவனை தேடினர்.

அப்போது கட்டிடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு ஆட்டோவில் அந்த சிறுவனை சுனில் பவார் (வயது22) என்ற வாலிபர் பிடித்து வைத்திருப்பதை பார்த்தனர்.

உடனே அவர்கள் ஆட்டோவை நோக்கிச்சென்றனர். இதை பார்த்ததும் வாலிபர் சுனில் பவார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்தநிலையில், சிறுவன் அரை மயக்க நிலையில் ஆட்டோவில் இருந்து மீட்கப்பட்டான்.

வாலிபர் கைது

சுனில் பவார், சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச்செல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

இதுபற்றி கட்டுமான அதிபரின் குடும்பத்தினர் பத்லாப்பூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுனில் பவாரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், பணப்பிரச்சினையில் தவிப்பதால் கட்டுமான அதிபரின் மகனை கடத்த முயன்றதாக கூறினார். சுனில் பவாரின் தந்தை மகாதேவ் என்பவர் கட்டுமான அதிபரின் அலுவலகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சுனில் பவார் உல்லாஸ்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். 

Next Story