பவானி அருகே மர்ம காய்ச்சலுக்கு சமையல் தொழிலாளி சாவு
பவானி அருகே மர்ம காய்ச்சலுக்கு சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பவானி,
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்த ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். அதன் விவரம் வருமாறு:–
பவானி அருகே உள்ள ஜம்பை பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31). சமையல் தொழிலாளி. நாகராஜ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். அவர் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. இதனால் உறவினர்கள் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து நாகராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நாகராஜ் மர்ம காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தார்.
இறந்த நாகராஜுக்கு சோனா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளார்கள்.