பெருந்துறை அருகே ஓடும் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது வேட்டி, சேலைகள் எரிந்து நாசம்


பெருந்துறை அருகே ஓடும் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது வேட்டி, சேலைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 10:52 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே ஓடும் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேட்டி, சேலைகள் எரிந்து நாசம் ஆனது.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள கள்ளியம்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து உள்ளார். இந்த வேனில் கள்ளியம்புதூர் பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட விசைத்தறி குடோன்களில் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகள் கேரளா மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த வேனை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 35) வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் ரமேஷ் சரக்கு வேனில் வேட்டி, சேலை பண்டல்களை ஏற்றிக்கொண்டு கள்ளியம்புதூரில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல விஜயமங்கலம் சுங்கச்சாவடிக்கு எடுத்து சென்றார். அங்கு 4 பண்டல்களை மற்றொரு வாகனத்தில் எடுத்து செல்வதற்காக இறக்கிவிட்டு மீதி பண்டல்களுடன் அங்கிருந்து கள்ளியம்புதூர் வந்து கொண்டிருந்தார்.

கள்ளியம்புதூர் அருகே உள்ள கே.பி.என்.தோட்டம் என்ற பகுதியில் சென்றபோது சரக்கு வேனின் பின்பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் ரமேஷ் சரக்கு வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் சரக்கு வேன் எரிந்து நாசம் ஆனது. வேட்டி, சேலை எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் என்றும் மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

டிரைவர் உடனே சரக்கு வேனில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Related Tags :
Next Story