கோவில்பட்டியில், 2–வது நாளாக ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்


கோவில்பட்டியில், 2–வது நாளாக ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 10 Nov 2017 2:30 AM IST (Updated: 10 Nov 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையில் இருந்து ஆக்கிரமிப்பில் இருந்த உரக்கடை உள்ளிட்ட 6 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நேற்று 2–வது நாளாக செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையில் இருந்து ஆக்கிரமிப்பில் இருந்த உரக்கடை உள்ளிட்ட 6 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

ஓடை ஆக்கிரமிப்புகள்

கோவில்பட்டியில் உள்ள ஓடைகள், நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோட முடியாமல் சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம் போன்று தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைவதுடன், சாலைகளும் பழுதடைகின்றன. மேலும் கோவில்பட்டி மூப்பன்பட்டி கண்மாய்க்கு போதுமான தண்ணீர் செல்லாததால், கோடைக்காலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

இதையடுத்து, இந்த கண்மாய்க்கு மழை தண்ணீர் செல்லக்கூடிய முக்கிய ஓடைகளில் ஒன்றான, செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடை முற்றிலும் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. பெரும்பாலான இடங்களில் அந்த ஓடை இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு கடைகள் கட்டப்பட்டும், மண் மூடியும் காணாமல் போயிருந்தது.

ஆக்கிரமிப்பில் இருந்து இந்த ஓடையை மீட்டு மூப்பன்பட்டி கண்மாய்க்கு மழை நீர் கொண்டு செல்ல வருவாய்த்துறையினரும், நகரசபை அதிகாரிகளும் கூட்டாக முடிவு செய்தனர். இதன்படி, இந்த கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றையதினம் ஓடையில் இருந்த 17 ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் பழைய கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

உரக்கடை அகற்றம்

நேற்று கோவில்பட்டி ஊரணி தெரு மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில் இந்த ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்தது. அந்த பகுதியில் ஓடையே தெரியாத அளவுக்கு, அதன் மீது கான்கிரீட் மூடி அமைத்து, அதன் மீது உரக்கடை செயல்பட்டது தெரிய வந்தது. அந்த உரக்கடையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பெட்டிக்கடை உள்ளிட்ட 6 கடைகள் அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து அந்த பகுதியில் ஓடை வெளியே தெரிந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு), தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நகரசபை ஆணையாளர் அச்சையா மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பார்வையிட்டனர்.


Next Story