மனுநீதி முகாம்: ரூ.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்


மனுநீதி முகாம்: ரூ.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:15 AM IST (Updated: 10 Nov 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே நடந்த மனுநீதி முகாமில், ரூ.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே அத்திக்கட்டானூரில் சிறப்பு மனுநீதி முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, ‘டெங்கு காய்ச்சல் 100 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடங்களை தவிர்க்க வேண்டும். இதனால் வாந்திபேதி ஏற்படுகிறது. அரசு அளிக்கும் உதவித்தொகையுடன் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பிட வசதி செய்துகொள்ள வேண்டும்‘என்றார்.

விழாவில், 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 45 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு, 50 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் பச்சனம்பட்டியை சேர்ந்த பெரமன் என்ற விவசாயி மின்னல் தாக்கி இறந்ததால் முதல்-அமைச்சரின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி மாலாவிடம் வழங்கினார். முகாமில் மொத்தம் ரூ. 24 லட்சத்து 436 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

முகாமில் ஏராளமானோர் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று மனு அளித்தனர். முன்னதாக பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்கள் துறைசார்ந்த செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜவகர், தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர் ஷகிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி வரவேற்று பேசினார். முடிவில் ஓமலூர் தாசில்தார் சித்ரா நன்றி கூறினார்.

இந்த முகாம் நடைபெற்று கொண்டிருந்த போது, கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரிடம் விசாரித்த போது, கணவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் மனம் உடைந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார்.

பின்னர் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்ததை அடுத்து அவர் கலெக்டரிடம் மனு கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அந்த பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு வந்தாரா? வேறு காரணங்களால் மயங்கினாரா? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story