நெல்லையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்
நெல்லையில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.
நெல்லை,
நெல்லையில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று பார்வையிட்டார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாதமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழா பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
முதல்–அமைச்சர்விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். மேலும் அவர் நெல்லை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.
அமைச்சர் பார்வையிட்டார்இந்த விழாவுக்காக பெல் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு எம்.ஜி.ஆரின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று காலை பார்வையிட்டார். அவர் நுழைவு வாயில் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மனோகரன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு ஆகியோர் உடன் இருந்தனர்.