நாகரீகமாக பேச முதல்–மந்திரி சித்தராமையா கற்றுக்கொள்ள வேண்டும் தேவேகவுடா பேச்சு
மேடைகளில் நாகரீகமாக பேசுவது எப்படி என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையா கற்றுக்கொள்ள வேண்டும் என தேவேகவுடா கூறினார்.
ஹாசன்,
மேடைகளில் நாகரீகமாக பேசுவது எப்படி என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையா கற்றுக்கொள்ள வேண்டும் என தேவேகவுடா கூறினார்.
தொழில்நுட்ப நகரமாக...ஹாசன் மாவட்டம் அரிசிகெரே டவுனில் புதிதாக கட்டப்பட்டுள்ள வால்மீகி பவனத்தை நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா திறந்துவைத்தார். அதன்பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு அன்னா பாக்கியா, சீராபாக்கியா என பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அரசின் இந்த திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் அடைந்த பயன்கள் என்ன? என்பது குறித்து அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநிலத்தை ஆட்சி செய்தபோது எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை என தற்போது சித்தராமையா குற்றம்சாட்டி வருகிறார். பெங்களூருவை தொழில்நுட்ப நகரமாக மாற்ற அடித்தளமிட்டது யாருடைய ஆட்சி காலத்தில் என்பதை சித்தராமையா முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
நாகரீகமாக பேச...முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி நடத்தி வரும் ‘விகாஷ வாகினி யாத்திரைக்கு‘ காசு கொடுத்து மக்கள் அழைத்து வரப்படுவதாக காங்கிரசார் கூறிவருகின்றனர். ஆனால் அவர்கள் காசு கொடுத்து அழைத்துவரப்பட்ட கூட்டம் அல்ல, ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்பதற்காக கூடிய கூட்டம் என்பது போக போக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு தெரிய வரும்.
மேலும் இதுவரை நானோ, எனது மகனோ, மாநிலத்தை ஆண்ட, ஆளுகின்ற முதல்வர்களை பற்றி தரக்குறைவாக பேசியதில்லை. ஆனால் முதல்–மந்திரி சித்தராமையா மேடைகளில் என்னையும், எனது மகனையும் தரக்குறைவாக பேசி வருகிறார். முதலில் மேடைகளில் நாகரீகமாக பேசுவது எப்படி என்பது குறித்து அவர் கற்றுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.