கர்நாடகத்தில் எந்த பகுதியிலும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம்
கர்நாடகத்தில் எந்த பகுதியிலும் எந்த ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி யு.டி.காதர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் எந்த பகுதியிலும் எந்த ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி யு.டி.காதர் கூறினார்.
கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரி யு.டி.காதர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
உணவு பொருட்கள்ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர் மாதம் ஒரு முறை இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலபுரகி, தட்சிணகன்னடா உள்பட வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பெங்களூருவுக்கு வந்தால் அவர்கள் இங்கேயே ஏதாவது ஒரு ரேஷன் கடையில் உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
இதனால் அரசு வழங்கும் இலவச அரிசி உள்பட உணவு பொருட்கள் உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்கும். மேலும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்க ‘பயோமெட்ரிக்‘ வசதியையும் அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் ரேஷன் அட்டையின் உரிமையாளர்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் கிடைக்கும். அத்துடன் முறைகேடுகள் முழுவதுமாக தடுக்கப்படுகிறது.
இலவச சமையல் எரிவாயுவறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் அட்டை கேட்டு 16 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்தனர். இதில் இதுவரை 10 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 லட்சம் பேருக்கும் வருகிற டிசம்பர் 15–ந் தேதிக்குள் ரேஷன் அட்டை வழங்கப்படும். வருமான சான்று மற்றும் சாதி சான்று வழங்காதவர்களுக்கு இந்த ரேஷன் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்திற்கு பயனாளிகளை தேர்ந்து எடுத்து ஒரு வாரத்தில் பட்டியல் வழங்கும்படி எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்துகிறது. இந்த நேரத்தில் சிலர் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். ஆயினும் திப்பு ஜெயந்தியை அமைதியான முறையில் செயல்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.
இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.